நிர்மால்யா அமர்வு - மொழியாக்கத்தின் நுட்பங்கள்
மொழியாக்கத்தின் நுட்பங்கள்
மொழியாக்கம் என்கிற இலக்கிய வகைமை, நவீன தமிழ் இலக்கிய சூழலில் தனி பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது. பதிப்பகங்கள் நான்கு புத்தகங்களைப் பதிப்பிக்கும் போது அவற்றில் இரண்டு மொழியாக்கப் புத்தகங்களாக உள்ளன. உலக அளவில் அல்லது இந்திய அளவில் பேசப்படும் ஒரு புத்தகம் உடனுக்குடன் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் சூழல் இன்று உருவாகி உள்ளது. கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்தாக் எழுதிய ‘ஹார்ட் லேம்ப்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு 2025 ன் சர்வதேச புக்கர் பரிசை பெற்றது. அந்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில மணி நேரத்தில் அதனுடைய தமிழ் மொழியாக்கத்தைப் பதிப்பிக்கும் அறிவிப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. கடந்த வருட பரிசை வென்ற இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் தமிழ் மொழியாக்கம் ‘மணல் சமாதி’ தற்போது விற்பனையில் உள்ளது.
அசுரத்தனமான இந்த மொழியாக்க வேகத்திற்கு இடையில் மொழியாக்கத்தின் நுட்பங்களைப் பற்றிய உரையாடல் அவசியமாக உள்ளது.
எனக்குத் தரப்பட்ட தலைப்பு மொழிபெயர்ப்பின் நுட்பங்கள். இலக்கிய மொழிபெயர்ப்புகளை மொழியாக்கங்கள் என்று கூறுவதே சிறப்பாக இருக்கும்.
மொழி பெயர்ப்பு என்பது மொழியை மட்டும் சார்ந்த இருப்பது. மொழியாக்கம் என்பது மொழியையும் உணர்வையும் சார்ந்து இயங்குவது. மூல ஆசிரியனின் உணர்வையும் மொழியையும் மூலத்திற்கு இணக்கமாகவும் அணுக்கமாகவும் கொண்டிருப்பதே நுட்பமான மொழியாக்கத்திற்கான வரையறை. மொழியாக்கத்தின் நுட்பம் என்பதை மூலமொழிக்கு நிகரான மொழிநுட்பத்தையும் உணர்வு நுட்பத்தையும் பேணுதல் என்றே நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தொல்காப்பியம் காலம் தொட்டு மொழியாக்கத்திற்கு தனியிடம் உள்ளது. மற்ற இந்திய மொழிகளில்/ உலக மொழிகளில் மொழியாக்கத்திற்கு இப்படியொரு தொன்மை இருப்பதாகத் தெரியவில்லை. தொல்காப்பியர் 'அதர்பட யாத்தல் ' என்கிறார். அதாவது, ‘உள்ளதை உள்ளபடி’ மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
தமிழில் ஒரு படைப்புக்கு பல மொழியாக்கங்கள் வந்துள்ளன. அதற்கான அவசியம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. பெரும்பாலான பதிப்பாளர்களும் வாசகர்களும் Readability யை மட்டும் கருத்தில் கொண்டு மொழியாக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு படைப்புக்கு பல மொழியாக்கங்கள் உருவாக, சரளமான வாசிப்பு தன்மை இல்லாமையே காரணமாக கருதப்படுகிறது. இந்த உரையாடலில் தமிழில் வெளிவந்த ஒரு படைப்புகான பல மொழியாக்கங்களின் நுட்பங்களை சில எடுத்துக்காட்டுகளின் வழியாக விளக்க முற்படுகிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
லயேஷ் தேலம்பற்றா (1994)
கேரளத்தின் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியை அடுத்த தேலம்பற்றா கிராமத்தில் பிறந்தார். பணியர் மொழியிலும் மலையாளத்திலும் எழுதி வருகிறார்.
பழங்குடி மொழி : பணியர்
கவிதை:
1. தண்டெவளே (பணியர் மொழி)
உத்தமனா கய்யும்பத்
தண்டடெவளே
அவெ ஸ்வர்ணமல்லா வொள்ளியுமல்லா
கறுத்துரண்ட கம்பி வளே
உத்தமனா தண்டடெவளே
உத்தம்மக்கு அவே
ஸ்வர்ணமும் வொள்ளியும்
எல்லாம் ஈ தண்டெவளே தானெ
உத்தமே தண்டெவளெ
கய்யூம்பே உட்டேலா தனி தங்க.
தமிழில்:
தண்டை வளையல்
பாட்டியம்மாவின் கையிலுள்ள
தண்டை வளையல்
அது தங்கம் அல்ல வெள்ளியும் அல்ல
கறுத்து உருண்ட கம்பி வளையல்.
பாட்டியம்மாவின் தண்டை வளையல்.
பாட்டியம்மாவுக்கு
தங்கமும் வெள்ளியும் எல்லாம்
இந்த தண்டை வளையலே.
பாட்டியம்மா கையில் அணிந்தால்
தண்டை வளையல் தனித்தங்கம்.
----------
லிஜினா கடுமேனி (1996)
காசர்கோடு மாவட்டம் கிழக்கு எளேரி கடுமேனி என்கிற பழங்குடியினரின் ஊரில் பிறந்தவர். கவிஞர், கதாசிரியர், நடனக் கலைஞர்.
பழங்குடி மொழி: மலைவேட்டுவன்
கவிதை:
ஏங்கடெ மண்ணு எங்கடெ உயிர் (மலைவேட்டுவன் மொழி)
இருளுங்கு இருளில்லாதெ வெளிவங்கு வெளில்லாதெ
ஒரு இற்று அன்னத்திங்கு பணிசெய்தோர்
கரிங்கோயி கூவ்ண கேட்டு
ஒரு போளெ கண்ணடக்காதெ
பாடத்த ஞாறிங்கு காவலிரிந்தேர்
குட்டி மக்க பைப்படக்குவ
கத்துண பள்ளெ நிறக்குவ
தம்பிரான்டெ மின்னுலு கும்பிட்டு நிந்தேர்
அம்மமக்களெ போற்றிண போலெ
வளத்திய ஞாறு விளஞ்சத கண்டுற்ற
தந்தோய சிரியாலெ தாளம் சவிட்டிந்து
கதிரங்ஙணெ கொய்திட்டங்கு
தம்பிரான்ற வல்லம் நிறச்சுட்டு
தீண்டபாடகலெ நின்னேங்கலடக்யேர்
மண்ணு உயிராய் கண்டிற்று
கய்யில் தயம்புமாயிற்று
தேவரெ கனிவு நோற்று தொவ்து நிந்தேர்.
தமிழில்:
எங்கள் மண் எங்கள் உயிர்
இருளை இருளென்று பாராமல்
பகலைப் பகலென்று பாராமல்
ஒரு பருக்கைச் சோற்றுக்காக வேலை செய்பவர்கள்.
சேவல் கூவுவதைக் கேட்டு
சற்றும் கண்ணிமைக்காமல்
வயல் நாற்றுக்குக் காவல் இருப்பவர்கள்.
சின்னக் குழந்தைகளின் பசியைப் போக்க
எரியும் வயிற்றை நிரப்ப
எஜமானன் எதிரில் கும்பிட்டு நிற்பவர்கள்.
அன்னை குழந்தைகளைப் பேணுவதைப் போல
வளர்த்த நாற்று விளைவதைக் கண்டு
மகிழ்ச்சிச் சிரிப்புடன் நடனம் ஆடுபவர்கள்.
நெற்கதிரை அறுத்து
எஜமானனின் கூடையை நிறைத்து
தீட்டுப் படாத தொலைவில் நின்று ஏங்குபவர்கள்.
மண்ணை உயிராக எண்ணி கையில் தழும்புடன்
எஜமானின் கருணைக்காகத் தொழுது நின்றவர்கள்.
Comments
Post a Comment