அந்தியூர் மணி அமர்வு - இலக்கிய உண்மையும் தத்துவ உண்மையும்

 அந்தியூர் மணி அமர்வு - இலக்கிய உண்மையும் தத்துவ உண்மையும்


தத்துவப் பகுதி

 1. (சிவஞானபோதம் – நூற்பா-3)

 

      உளது இலது என்றலின், எனது உடல் என்றலின்,

      ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்

      உண்டி வினைஇன்மையின், உணர்த்த உணர்தலின்,

      மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா”      

 

உரை :

1.ஆன்மா என்ற ஒன்று இல்லை என்று கூறுவோர் சூனிய ஆன்மாவாதிகள்.

2.உடம்பே ஆன்மா என்போர் தேகான்மாவாதிகள்.

3.மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளே ஆன்மா என்பர் இந்திரிய ஆன்மாவாதிகள்.

4.கனவில் செயல்படும் நுண்ணுடம்பே (சூக்கும தேகம்) ஆன்மா என்பர் சூக்கும ஆன்மாவாதிகள்.

5.பிராணவாயுவே ஆன்மா என்பர் பிராணான்மவாதிகள்.

6.சுத்த பிரமமே ஆன்மா என்பர் ஏகான்மவாதிகள்.

7.எல்லாக் கருவிகளும் கூடிய கூட்டமே ஆன்மா என்பர் சமூக ஆன்மாவாதிகள்.

இவ்வாறு கூறும் எழுவர் கருத்துக்களையும் மறுத்துத் தனியாக ஆன்மா உளது என்று நிலைநாட்டி உள்ளார் மெய்கண்டார்.அவையாவன.

1.ஆன்மா சூனியம் என்று கொள்பவர் பெளத்தரில் ஒரு பிரிவினர். உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பகுத்து ஆய்ந்து பார்த்து ஆன்மா இன்னது என்று அறிய முடியாமையினால் ஆன்மா சூனியம் என்றனர்.

ஆன்மா இல்லை என்று கூறும் சூனிய ஆன்மாவாதிகளும் இல்லை என்று வாளா கூறாமல் உடல், பொறி முதலியவற்றையெல்லாம் முறையே இஃது ஆன்மா அன்று, இஃது ஆன்மா அன்று என்று ஒவ்வொன்றாக கழித்து அங்ஙனம் இல்லை என்று கூறும் ஓர் அறிவு உண்டல்லவா? அவ்வறிவே ஆன்மா ஆகும். (இலது என்றலின் ஆன்மா உளது).

2.உடம்பில்தான் அறிவு நிகழ்கின்றது, அதனால் உடலையே ஆன்மா என்பர் தேகான்மவாதிகள்.

எனது வீடு, எனது மனைவி, எனது கணவன் என்பதைப் போலவே எனது கை, கால், எனது உடல் என்று கூறுகின்றோம். எனது உடல் என்று கூறும்போது உடலுக்கு வேறாக ஆன்மா உள்ளது என்பது தெரிய வருகிறது. நான் உடல் என்று யாரும் கூறுவதில்லை.

3.உடம்பில் உள்ள செவி, தோல், கண், நாக்கு, மூக்கு, ஆகிய ஐம்பொறிகளே ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை அறிகின்றன. ஆதலால் ஐம்பொறிகளே ஆன்மா என்பர் இந்திரிய ஆன்மாவாதிகள்.

உடலில் உள்ள பொறிகளில் ஒன்று ஒன்றை மட்டுமே அறியும், மற்றொன்றை அறியாது. கண் உருவத்தை அறியும், ஆனால் கேட்கும் செயலைச் செய்யாது. காது கேட்டலைச் செய்யும், ஆனால் ஒரு பொருளின் சுவையை சுவைக்க முடியாது. ஏனைய பொறிகளும் இவ்வாறே ஆகும். ஐம்பொறிகளும் தன்னை உணரமாட்டா, தம்மைச் செயல்படுத்துகின்ற ஆன்மாவையும் அறியமாட்டா. ஐம்பொறிகளையும் செயல்படுத்துகின்ற – அனுபவிக்கின்ற ஆன்மாவானது ஐம்பொறிகளுக்கு வேறாக உள்ளது. (ஐம்புலன் அறிதலின் ஆன்மா உள்ளது).

4.ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து மற்றும் அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்று என்ற எட்டும் சேர்ந்தது நுண்ணுடம்பு (சூக்குமதேகம்) ஆகும். கனவு நிலையில் இச்சூக்கும உடலே செயல்படும். ஐம்பொறிகளையும் சூக்குமதேகம் உள்ளே இருந்து செலுத்தி அறிகின்றதாகையால் அச்சூக்கும தேகமே ஆன்மா என்பர் சூக்கும ஆன்மாவாதிகள்.

சூக்குமதேகம் ஆன்மா என்றால் கனவில் கண்டவற்றை நனவில் தெளிவாக அறிந்து கூற வேண்டும். முந்திய நாள் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நனவில் மறுநாள் மாறாமல் தெளிவாகக் கூறுகின்றோம். ஆனால், இரவில் கண்ட கனவு நிகழ்ச்சிகளை மறுநாள் காலையில் மறவாமல் முழுவதும் கூற முடிவதில்லை. கனவு கண்டதும் விழித்துக் கொண்டாலும் உடனே மறந்து விடுகின்றது. தெளிவாக அறிந்துகூற முடிவதில்லை. கண்ட கனவைத் தெளிவாகத் தெரிந்து கூற முடியாமைக்குக் காரணம், ஆன்மா பருஉடம்பு (தூலதேகம்), நுண்ணுடம்பு (சூக்குமதேகம்) ஆகிய இரண்டிற்கும் வேறாக உள்ளதே ஆகும்.

நனவு நிலையில் ஆன்மா பருஉடம்பில் நின்று புறத்து நிகழ்ச்சிகளை அறிந்து வருகின்றது. கனவு நிலையில் பரு உடம்பு செயலற்றுக்கிடக்க, ஆன்மா சூக்கும உடம்புடன் கூடி நின்று அகத்தே நிகழும் நிகழ்ச்சிகளை அறிந்து வருகின்றது. கனவு நீங்கி நனவுக்கு வரும்போது சூக்கும உடம்பை விட்டு நீங்கிப் பருவுடம்பிற்கு வருகின்றது. அந்த மாற்றத்தால் ஆன்மா சூக்குமதேகத்தில் இருந்து கண்டவற்றை மறந்து விடுகின்றது. தூலதேகம், சூக்குமதேகம் ஆகிய இரண்டிற்கும் வேறாகிய ஆன்மா ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தைப் பற்றும்போது தேக மாற்றத்தால் மறதியைப் பெறுகின்றது. ஆதலால் ஆன்மா சூக்குமதேகத்தின் வேறாக உள்ளது என்பது புலனாகிறது. (ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது). ஒடுக்கம் ஐம்பொறிகளும் செயல்படாமல் ஒடுங்கி நிற்கின்ற கனவு நிலையாகும்.

 

5.பிராண வாயு என்ற மூச்சுக் காற்று உடலின் உள்ளே புகுந்து தொழிற்பட்டு, உடலில் உள்ள கருவிகளைச் செயல்படுத்தி அறிந்து கொள்ளும் தன்மை உடையதாய் இருத்தலால் அப்பிராணவாயுவே ஆன்மா என்பர் பிராணான்மாவாதிகள்.

ஒடுங்கிய உறக்க நிலையில் பிராணவாயு இயங்கிக் கொண்டிருந்தாலும் இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடலின் தொழிற்பாடும் நிகழவில்லை. நனவில் ஏனைய கருவிகள் இயங்கும் பொழுது இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடலின் தொழிற்பாடும் நிகழ்கின்றன. பிராணவாயுவே ஆன்மா என்றால் நனவைப் போலவே உறக்கத்திலும் அப்பிராணவாயு இயங்கிக் கொண்டிருப்பதால் நனவில் நிகழ்கின்ற இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடம்பின் தொழிற்பாடும் உறக்கத்திலும் நிகழ்தல் வேண்டும். அவ்வாறு நிகழாமையால் பிராணவாயுவே ஆன்மா என்பது பொருந்தாது. (கண்படில் உண்டி, வினை இன்மையின் ஆன்மா உளது).

 

கண்படில் – உறக்கத்தில், உண்டி – இன்பத் துன்ப நுகர்ச்சி, வினை – உடல் தொழிற்படுதல். இன்று பலரும் பிராணவாயுவே ஆன்மா என்று கருதுகின்றனர். அக்கொள்கை மறுக்கப்பட்டுள்ளது.

6.பருவுடம்பு, ஐம்பொறிகள், சூக்குமதேகம், பிராணவாயு ஆகியன சடப்பொருள்கள் ஆகும். அவற்றைத் தனித்தனி ஆன்மா என்று கூறுதல் பொருந்தாது. பரம்பொருள் என்னும் பிரமம் அறிவாய் உள்ளது. ஆதலால் பிரமமே ஆன்மா என்பர் ஏகான்மவாதிகள். பிரமமே ஆன்மா என்பதால் பிரமான்மவாதி என்றும் பிரமம் பேரறிவுடையது, அவ்வறிவே ஆன்மா என்பதால் விஞ்ஞான ஆன்மவாதி என்றும் வழங்கப் பெறுவர்.

ஆன்மாவானது கருவிகள் தொழிற்படாமல் அடங்கிய நிலையில் எதனையும் அறிவதில்லை. எல்லாக் கருவிகளும் கூடிய விழிப்பு நிலையில் அனைத்தையும் நன்றாக ஆன்மா அறிகின்றது. ஆனால் பிரமமோ கருவிகள் எவற்றின் துணையும் இல்லாமல் என்றும் ஒரே தன்மையாக அறிகின்றது. ஆன்மா எதனையும் தானே அறிய மாட்டாது. துணையாகிய கருவிகள் உணர்த்தவே ஆன்மா உலகப் பொருள்களை உணர்கின்றது. அறிவித்தால் அன்றி அறிய மாட்டாத ஆன்மா, எல்லாவற்றையும் தானே அறிந்து நிற்கும் பிரமத்தின் வேறாகும். (உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது).

 

7.உடல், ஐம்பொறி, சூக்குமதேகம், பிராணவாயு ஆகியவற்றுள் ஒவ்வொன்றே ஆன்மா என்றால் பொருந்தாது. அவற்றுள் ஒன்று குறைந்தபோது அறிவு நிகழாமையால் அவை எல்லாம் கூடியபோது அறிவு நிகழ்வதால் அவை அனைத்தும் கூடிய கூட்டமே (சமூகம்) ஆன்மா என்பர் சமூக ஆன்மவாதிகள்.

எல்லாக் கருவிகளும் சேர்ந்த கூட்டம் (சமூகம்) உடம்பு என்று பெயர் பெறுவதின்றி ஆன்மா என்று பெயர் பெறுவதில்லை. உடம்பு ஓர் இயந்திரம் போன்ற இயல்பு உடையது. உடம்பில் உள்ள கருவிகள் அந்த இயந்திரத்தினுடைய உறுப்புகள் போன்ற இயல்பின. இயந்திரத்தின் உறுப்புகள் நன்றாக இருந்தாலும் இயந்திரம் தானே இயங்காது, அவ்வியந்திரத்தை இயக்குவோன் வேறாக ஒருவன் இருந்து இயக்க வேண்டும். அதுபோல உடம்பும் கருவிகளுடன் சேர்ந்திருந்தாலும் இயக்கும் ஆன்மா வேறாக இருந்து இயக்கும் போதுதான் செயல்படும். ஆதலால் உடம்பினுள் நின்று உடம்பை இயக்கும் அறிவாகிய ஆன்மா, சடமாகிய இக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாக இருத்தல் வேண்டும். (மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது).

அதாவது, மாயையின் காரியங்கள் ஆகிய கருவிகளால் ஆக்கப் பெற்ற இயந்திரம் போன்ற உடலினுள்ளே அக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாக ஆன்மா உள்ளது.

சுருக்கமாக

1.இலது என்றலின் ஆன்மா உளது.

2.எனது உடல் என்றலின் ஆன்மா உளது.

3.ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது.

4.ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது.

5.கண்படில் உண்டி வினை இன்மையின் ஆன்மா உளது.

6.உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது.

7.மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது.

என்று  எழுவர் கருத்துக்களையும் மறுத்துத் தனியாக ஆன்மா உளது என்று நிலைநாட்டி உள்ளார் மெய்கண்டார்.

 

2. மணிமேகலை -சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை (வரி 202லிருந்து 240வரை) சாங்கியம்

 

இதுசாங் கியமதம் என்றுஎடுத்து உரைப்போன்

தனைஅறிவு அரிதாய்த் தான்முக் குணமாய்

மனநிகழ்வு இன்றி மாண்புஅமை பொதுவாய்

எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம்எனச்

சொல்லுதல் மூலப் பகுதிசித் தத்து

 

சாங்கிய மதம் இது என்று எடுத்துரைப்பவன் சொல்கிறான். மூலப்பகுதி என்பது சித் சத்து. எல்லாப் பொருளும் தோன்றுவதற்கு அதுவே இடம். அது உணர்வதறுகு அரிதானது. மூன்று குணம் கொண்டது. மனத்தால் நினைக்காமலேயே தன்னிச்சையாய் மாண்புடன் இயங்குவது.

 

மான்என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு

அதன்கண்ஆ காயம் வெளிப்பட் டதன்கண்

வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி

யானது வெளிப்பட்டு அதன்கண் அப்பின்

தன்மை வெளிப்பட்டு அதில்மண் வெளிப்பட்டு

அவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்டு

ஆர்ப்புஉறு மனத்துஆங் கார விகாரமும்

 

மான் என்னும் புத்தி அதிலிருந்து வெளிப்படும். மான் என்பதிலிருந்து மானம் என மக்கள் வழங்கும் ஆகாயம் கெளிப்படும். ஆகாயத்தில் வாயு என்னும் காற்று வெளிப்படும். காற்றிலிருந்து அங்கி என்னும் தீ வெளிப்படும். தீயிலிருந்து அப்பிக்கொள்ளும் நீர் வெளிப்படும். தீ ஆறி மண் வெளிப்படும். இந்த ஐந்தும் கூட்டாகி மனம் வெளிப்படும். மனம் ஆரவாரம் செய்யும்பொது ஆங்காரம் வெளிப்படும்.

 

ஆகா யத்தில் செவிஒலி விகாரமும்

வாயுவில் தொக்கும் ஊறுஎனும் விகாரமும்

அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும்

தங்கிய அப்பில்வாய் சுவைஎனும் விகாரமும்

நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்

சொலப்பட்டு இவற்றின் தொக்கு விகாரமாய் 

 

ஆகாயத்தில் செவியில் கேட்கும் ஒலி தோன்றும்.

வாயுவில் வெளிப்பொருள் தொடும் உணர்வும், அகத்தில் தோன்றும் ஊறல் உணர்வும் வெளிப்படும்.

அங்கியில் கண்ணுக்குப் புலனாகும்ஃ ஒளி புலப்படும்.

அப்புவில் சுவை தெரியும்.

நிலத்தில் மணம் தெரியும்.

சொல்லப்பட்ட இவை பொருள் மாறும் விகாரத்தின்போது புலனாகும். 

 

வாக்குப் பாணிபாத பாயுருஉபத் தம்என

ஆக்கிய இவைவெளிப் பட்டுஇங்கு அறைந்த

பூத விகாரத் தால்மலை மரம்முதல்

ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து

வந்த வழியே இவைசென்று அடங்கி

அந்தம்இல் பிரளய மாய்இறும் அளவும்

ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியம்ஆம்

 

வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபத்தம், என்னும் ஐந்தாக இவை வெளிப்படும். இவற்றின் தோற்ற விகாரத்தால் மலை, மரம் முதலான பொருள்கள் தோன்றி, உலகமாக இயங்கும். தோன்றி வந்த வழியிலேயே அவை ஒன்றுக்குள் ஒன்று அடங்கி, முடிவில் பிரளயம் ஆகி, எல்லாம் அழிந்துவிடும். அவை அழியும் வரையில் அனைத்தும் நித்தியம் என்று  சொல்லப்படும்.

 

அறிதற்கு எளிதாய் முக்குணம் அன்றிப்

பொறிஉணர் விக்கும் பொதுவும் அன்றிப்

எப்பொரு ளும்தோன் றுதற்குஇடம் அன்றி 

அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்

ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியமாய்

நின்றுஉள உணர்வாய் நிகழ்தரும் புருடன்

 

புருடன் எல்லாவற்றிற்கும் முதல். புருடன் அறிந்துகொள்வதற்கு எளிதானது. தோன்றல் திரிதல் மயங்கல் என்னும் மூன்று குணங்களை உடையது. இதனைப் பொறிகளால் உணர்ந்துகொள்ள முடியாது. எந்தப் பொருளும் அதிலிருந்து தோன்றுவதற்கு இடம் தராது. தோன்றும் பொருள்கள் அனைத்தையும் உணர்ந்துகொள்ளும் உணர்வு அது. ஒன்றாக எங்கும் பரந்து நிலவியிருக்கும். நித்தியமாகி நிற்கும்.

 

புலம்ஆர் பொருள்கள் இருபத் தைந்துஉள

நிலநீர் தீவளி ஆகா யம்மே

மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே

உறுசுவை ஒளிஊறு ஓசைநாற் றம்மே

வாக்குப் பாணி பாதபாயு ருபத்தம்

ஆக்கும் மனோபுத்தி ஆங்கார சித்தம்

உயிர்எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்எனச்

செயிர்அறச் செப்பிய திறமும் கேட்டு,

 

அறிவுக்குப் புலனாகும் பொருள்கள் 25.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் - 5 பூதம்

மெய், வாய், கண், மூக்கு, செவி - 5 பொறி

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் - 5 புலன்

வாக்கு, பாணி, பாதம், பாயுரு, பத்து என்னும் பற்று - 5  செயல்

மனம், புத்தி, ஆங்காரம், சித்தம், உயிர் என்னும் ஆன்மா - 5 இயக்கம்

சாங்கிய மதம் கூறும் இவற்றையெல்லாம் மணிமேகலை கேட்டாள்.

 

 

 

 

 

 

இலக்கியப் பகுதி

 

1. புறநானூறு (பாடல் 214)

இயற்றியவர்:  கோப்பெருஞ்சோழன்.

 

செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே

ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி

நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;

யானை வேட்டுவன் யானையும் பெறுமே;

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;       

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,

செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;

செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,

மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;             

மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்

கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,

தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே,

                

உரை;

 நல்வினை நம்மாலும் செய்யமுடியுமா என்று ஐயப்பட்டுக்கொண்டே வாழ்பவர் நெஞ்சத்தில் துணிவு இல்லாத கோழைகள் ஆவர். மிகப் பெரிய விலங்காகிய யானை வேட்டைக்குச் சென்றவன் அதனைப் பெறவும் முடியும். குறும்பூழ் என்னும் சிறிய பறவையை வேட்டையாடச் சென்றவன் வேறுங்கையோடு திரும்புதலும் உண்டு. அதனால் உயர்ந்ததை உள்ளி ஊக்கம் கொள்ளவேண்டும். அவர்களின் முயற்சியால் அது அவருக்குக் கைகூடும். அதனால் அவருக்கு அடைவதற்கு அரிய உலகின்பத்தைத் துய்க்கும் பேறு கிட்டும். அது கிடாக்காவிட்டால் மறுபிறவி இல்லாத பேறாவது கிடைக்கும். நல்ல பிறவி கிட்டாமல் போனாலும், இமயத்தில் பறக்கும் கொடி போல அனைவருக்கும் தெரியும் புகழோடு இந்த உலகில் வாழும் பேறு பெறுதல் உறுதி. எனவே நல்லனவற்றை உறுதிப்பாட்டோடு செய்தல் வேண்டும்.

 

2.சிறுபஞ்சமூலம் ( பாடல் 61 )

இயற்றியவர்: காரியாசான்

 

அரம்போற் கிளையடங்காப் பெண்வியக்கத் தொண்டு

மரம்போன் மகன்மாறாய் நின்று-கரம்போலக்

கள்ளநோய் காணு மயலைந்து மாகுமே

லுள்ள நோய் வேண்டா வுயிர்க்கு. 

 

உரை;

1.மரத்தை அறுக்கும் வாள் போல் தன்னை அறுத்துக்கொண்டிருக்கும் உற்றார் உறவினர்கள்

2.தன் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத மனைவி

3.தன் விருப்பம் போல் நடந்துகொள்ளும் தொண்டன்

4.மரம் போல் நிற்கும் மகன்

5.ஏறு மாறாய் நின்று ஏதோ கை உதவுவது போலத் திருட்டுத்தனமாகத் துன்பம் தரும் அக்கம்பக்கத்தார்

இவை ஐந்தும் இருந்தால் ஒருவன் உயிர்க்கு உள்ளத் துன்பம் வேறு வேண்டுவதில்லை.

Comments

Popular posts from this blog

அறிமுகம்

சிவகுமரன் அமர்வு - சரவணன் சந்திரன் சிறுகதைகள்