கவிநிலவன் அமர்வு - கம்பராமாயணத்தில் நிலக்காட்சி

 கம்பராமாயணத்தில் நிலக்காட்சி: 


நாம் காணுகின்ற இந்த உலகினை கவி வேறொன்றாக்கி நம் கையில் தருகிறான். அதன்மூலம் இந்த நிலம் மீது தீராக் காதலை மூட்டிவைக்கிறான். கம்பன் தன் சொற்களின் ஊடாக படைத்துக்காட்டும் வியப்புமிகு உலகம் பற்றியது இந்த அமர்வு. 


 இரவு‌ வர்ணனை: 

1. 

ஆலம் உலகில் பரந்ததுவோ;

    ஆழி கிளர்ந்ததோ, அவர் தம்

நீல நிறத்தை எல்லோரும்

    நினைக்க அதுவாய் நிரம்பியதோ,

காலன் நிறத்தை அஞ்சனத்தில்

    கலந்து குழைத்துக் காயத்தின்

மேலும் நிலத்தும் மெழுகியதோ,

    விளைக்கும் இருள் ஆய் விளைந்தவே.


பொருள்: ஆலமான விஷம் உலகில் பரந்ததா? கடல் கிளர்ந்துபோனதா? அவருடைய (இராமனுடைய) நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாக நிரம்பியதோ? காலனுடைய நிறத்தை மையில் குழைத்து ஆகாயத்தின் மீதும் மண்ணின் மீதும் மெழுகினார்களோ? எங்கும் இருளாய்ப் பரந்து உள்ளதே! 

(சீதை இராமன் மீது உண்டான காதலால் இரவைக் கண்டு புலம்புதல்) 


2. 

பரந்து மீன் அரும்பிய

    பசலை வானகம்,

அரந்தை இல் முனிவரன்

    அறைந்த சாபத்தால்

நிரந்தரம் இமைப்பு இலா

    நெடுங்கண் ஈண்டிய

புரந்தரன் உரு எனப்

    பொலிந்தது எங்குமே.


பொருள்: பரந்து விரிந்து விண்மீன்கள் அரும்பியிருக்கும் இந்த பசலை வானம் குற்றமற்ற முனிவனான கௌதமன் அறைந்த சாபத்தால் நிரந்தரமாய் இமைப்பில்லாத கண்கள் உடல் முழுவதும் ஈட்டிக்கொண்ட இந்திரனின் உருவம் என எங்கும் பொலிந்தது.

(கானகம் சென்ற இராம இலக்குவர் காணும் முதல் இரவு) 


முத்தின் சிரிப்பு: 


3. 

தூரம் இல்லை மயில் இருந்த

    சூழல் என்று மனம் செல்ல,

வீரம் வில்லி, நெடுமானம்

    வெல்ல நாளும் மெலிவானுக்கு,

‘ஈரம் இல்லா நிருதரோடு

    என்ன உறவு உண்டு உனக்கு ‘ஏழை

மூரல் முறுவல் குறி காட்டி,

    முத்தே! உயிரை முடிப்பாயோ?


பொருள்: சீதை இருக்கும் இடம் இங்கிருந்து வெகுதொலைவில் இல்லை என்று மனம் செல்ல, வீரம் என்னும் பேருணர்வின் மூலமாகிய மான உணர்வு அதனைத் தடுக்க நிதம் மெலிவானுக்கு சீதையின் சிரிப்பைக் காட்டி உயிர் குடிக்கத் திட்டமிட்டுள்ளாயா முத்தே? 

ஈரம் இல்லாத அரக்கர்களோடு உனக்கு என்ன உறவு சொல்! 


அந்தி வர்ணனை: 


4. 

விரி மலர்த் தென்றல்  ஆம்

    வீசு பாசமும்,

எரி நிறச் செக்கரும்

    இருளும் காட்டலால்,

அரியவட்கு, அனல் தரும்

    அந்திமாலை ஆம்

கரு நிறச் செம்மயிர்

    காலன், தோன்றினான்.


உரை: மலர் மணம் கொண்ட தென்றல் என்னும் பாசக்கயிறும் தீ நிறம் கொண்ட செம்மையும் இருளும் காட்டுவதால் சிதைக்கு, அனல் தருகின்ற அந்திமாலை என்னும் கரிய நிறமும் செம்மயிரும் கொண்ட காலன் தோன்றினான். 

   

 5. 

மீது அறை பறவை ஆம் பறையும் கீழ் விளி

ஓதம் என் சிலம்பொடும் உதிரச் செக்கரும்

பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால்

சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே.


பொருள்: மேலே பறவைகளின் ஒலி எனும் பறையும், கீழே கடலின் ஒலி எனும் சிலம்பும் இடையே செவ்வானமாகிய இரத்த குறிகளையும் அதன் மேல் பாதக இருளால் செய்த கருப்பு ஆடையும் அணிவதால் தேவியை சாதகம் செய்பவனைப்போல் விளங்கியது அந்த மாலை. 


நிலம் எனும் பெண்: 


6. 

பண்கள் வாய் மிழற்றும் இன்

   சொல் கடைசியர் பரந்து நீண்ட

கண், கை, கால், முகம், வாய் ஒக்கும்

   களை அலால் களை இலாமை

உண் கள் வார் கடைவாய் மன்னர்

   களைகலாது உலாவி நிற்பர்

பெண்கள்பால் வைத்த நேயம்

   பிழைப்பரோ சிறியோர் பெற்றால்?


பொருள்: பண் இசைப்பதுபோன்று தம் இனிய சொற்களை மொழியும் உழத்தியரின் பரந்து நீண்ட கண், கை, கால், முகம், வாய் ஆகியவற்றை ஒத்திருக்கும் மலர்கள் எனும் களைகள் அல்லாமல் வேறு களைகள் வயலில் இல்லாததால், உண்ட கள் ஒழுகும் வாயினைக் கொண்ட உழவர்கள் அதனைக் களையாமல் நிற்பார்கள்! பெண்களின் கீழோர் இச்சை வைத்தால் பிழைப்பார்களோ? 


7. 

இயல் புடைபெயர்வன மயில்; மணி இழையின் 

வெயில் புடைபெயர்வன மிளிர் முலை; குழலின் 

புயல்புடை பெயர்வன பொழில்; அவர்‌ விழியின் 

கயல் புடைபெயர்வன கடி கமழ் கழனி 


பொருள்: அந்நகரில் மயில்கள் பெண்களின் சாயல்கொண்டு இருந்தன. அவர்தம் முலைமேல் அணிந்த அணிகளின் ஒளியே வெயிலாக வீசியது. மேகங்களெல்லாம் அப்பெண்களின் கூந்தலைப்போல சோலைகளில் படர்ந்து ஊர்ந்தன.  மணம் கமழும் மலர் மலரும் வயல்களில் உலவும் கயல்களெல்லாம் அப்பெண்களின் விழிகளே ஆகும். 


8. 

நிரம்பிய‌ மாடத்து உம்பர்

   நிரைமணிக் கொடிகள் எல்லாம் 

'தரம் பிறர் இன்மை உன்னி 

   தருமமே‌ தூது செல்ல 

வரம்பு இல் பேர் அழகினாளை 

   மணம் செய்வான் வருகின்றான்' என்று 

அரம்பையர் விசும்பின் ஆடும் 

   ஆடலை ஆடக்கண்டார். 


பொருள்: நிறைந்துள்ள மாடத்தின் மேலே நிறைந்து வரிசையாக அமையப்பெற்றுள்ள கொடிகள் எல்லாம் "சீதையை மணம் புரிய தரம் உள்ளவன் இராகவன்‌ மட்டும் தான்‌ என்று தருமம் அவனிடம் தூதுபோய்ச்சொல்ல, அவன் சீதையை மணந்துகொள்ள வருகிறான்" என்று தேவமகளிர் வானில் ஆடும் நடனத்தை ஆடியதைக் கண்டனர்.


9. 

‘உடுத்த நீர் ஆடையள்,

    உருவச் செவ்வியள்,

பிடித்தரு நடையினள்

    பெண்மை நன்று! இவன்

அடித்தலம் தீண்டலின்

    அவனிக்கு அம் மயிர்

பொடித்தன போலும் இப் புல் ‘

    என்று உன்னுவாள்


பொருள்: இராமனின் அழகைக் கண்ட சூர்ப்பணகை, " நீரை ஆடையாக உடுத்தியவளும் உருவத்தில் அழகினளும் பெண்‌ யானையைப் போன்ற நடையை உடையவளுமான நிலமகளின் பெண்மை நன்று! இங்கு முளைத்திருக்கும் புல்லெல்லாம் இராமனின் பாதங்கள் தீண்டியதால் அவள் உடலில் எழுந்த மயிர்க்கூச்சலோ?" என்று நினைத்தாள்.

Comments

Popular posts from this blog

அறிமுகம்

சிவகுமரன் அமர்வு - சரவணன் சந்திரன் சிறுகதைகள்