தேஜஸ் அமர்வு - சமஸ்கிருத சந்த மரபு
சமஸ்கிருத சந்த மரபு
“சொல்லென்பது
ஒலி. செவியுணரும் ஒலி அகமுணரும் ஒலியாலேயே இணைக்கப்பட்டுள்ளது. ஒலிகளை இணைப்பதன் அறிவையே
சந்தஸ் என்றனர் முன்னோர். தவளைமுட்டைகளை அன்னையின் கருவறைப்பசை இணைத்திருப்பதுபோல சொற்களை
சந்தஸ் இணைக்கிறது. ஓடும் பிரக்ஞை எனும் ஓடையில் ஆடி அலைந்து ஒன்றாய் நிற்க அவற்றுக்கு
உதவுவது சந்தஸே. அவை ஒவ்வொன்றும் தன்னை தானறிந்து உயிர்கொண்டெழும்போது சந்தஸை மீறிச்செல்கின்றன.
சந்தஸில்லாத சொல் என்பது வானமில்லாத விண்மீன் வெளி என்றே அறிக.”
வண்ணக்கடல் - வெண்முரசு
சந்தஸ் என்பது செயுள்களை வடிவைக்கும் யாப்பு முறை.
இது ஃசத் என்னும் மூல சொல்லிலிருந்து வருவதாக சொல்வதுண்டு. ஃசத் என்றால் மகிழ்விப்பது
அல்லது மறைப்பது என்ற பொருள். அதாவது சந்தஸுடன் கூடிய மந்திரங்கள் தேவர்களை (அல்லது
கேட்போரை) மகிழ்விப்பதும் ஓதுவோரை காப்பதாகவும் பொருள் கொள்ள படுகிறது. வேதத்தின் ஆறு
அங்கங்களில் இது ஒன்று. வேத புருஷனின் பாதங்களாக கருதப்படுகிறது. இதற்கு முதல் ஆசிரியராக கருதப்படுபவர் பிங்கலர்.
இவர் காலம் பொ யு 2 ண்டாம் அல்லது 3 ன்றாம்
நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்களால் ஊகிக்கபடுகிறது. அவர் இயற்றிய சந்த சூத்திரம் சந்தஸுக்கு முதல் நூலாக
இன்று கருதப்படுகிறது. பிறகு சந்தோனுசானம், சந்தோ மஞ்சரி, விருத்தரத்னாகர, ஜெயதேவ சந்தஸ்
போன்ற நூல்கள் இயற்ற பட்டன.
சந்தஸை இருவகையாக
வகுக்க முடியும். அக்ஷரவிருத்தம் ( எழுத்தை அடிப்படையாக கொண்டது) மற்றும் மாத்ராவிருத்தம்
( மாத்திரை அளவை அடிப்படையாக கொண்டது) என்று. மேலும் சமம், அர்த்தசமம் விஷமம் என்று
அதன் வரிகளின் அடிப்படையில் வகுக்க பட்டது. சந்தஸை வகுக்க எழுத்துகளை கணம் என்று சிறு
துண்டுகளாக பிரிக்கப்படுகிறது.ஒவ்வொரு கணமும் ஒரு எழுத்தால் சுட்டப்படுகிறது. ம,ய,ர,ஸ,த,ஜ,ஃப,ந,க,ல
ஆகிய இவை பத்தும் தான் கணங்களின் பெயர்கள். இதை இவ்வாறு கூறுகிறது விருத்தரத்னாகரம்
म्यरस्तजभ्नगैर्लान्तैरेभिर्दशभिरक्शरैः
समस्तं
वाङ्मयं व्याप्तं त्रैलोक्यम् इव विष्णुना
ம்யரஸ்தஜப்நகைர்லாந்தைரேபிர்தஷபிரக்ஷரைஃ
ஸமஸ்தம்' வாங்மயம்' வ்யாப்தம்' த்ரைலோக்யம் இவ விஷ்ணுநா
பொருள்
ம,ய,ர,ஸ,த,ஜ,ஃப,ந,க, ல என்ற எழுத்துக்கள்
விஷ்ணு மூன்று லோகங்களையும் அளந்தது போல் அத்தனை வார்த்தைகளையும்
அளக்கிறது.
கணங்களின் இலக்கணம்
எழுத்துக்கள் இருவகை - குரு மற்றும் லகு. இதில் குரு
இரு மாத்திரை அளவும் லகு ஒரு மாத்திரை அளவும் இருக்கும்.
குரு - நெடில் எழுத்துக்கள், அனுஸ்வரம் மற்றும்
விசர்கம் உடைய எழுத்துக்கள் - ( यं रैः),
சம்யுக்த (இணைக்கப்பட்ட எழுத்துக்கள்) எழுத்துக்கு முந்தைய எழுத்துக்கள்.
லகு -
மற்ற எழுத்துக்கள் எல்லாம் லகு எழுத்துக்கள்.
ம கணம்
மூன்று எழுத்துக்களும் குரு எழுத்துக்கள் - உதாரணம் “தீ ஸ்ரீ ஸ்த்ரீ”
ய கணம்
முதல் எழுத்து லகு மற்ற இரண்டும் குரு எழுத்துக்கள்
- உதாரணம் “வரா ஸா”
ர கணம்
நடு எழுத்து குரு மற்ற இரண்டும் லகு எழுத்து - உதாரணம் “ கா குஹா”
ஸ கணம்
கடைசி எழுத்து மற்றும் குரு மற்ற எழுத்துக்கள் லகு
- உதாரணம் “ வஸுதா”
த கணம்
கடைசி எழுத்து
லகு மற்ற எழுந்துக்கள் குரு - உதாரணம் “ ஸா தே க்வ”
ஜ கணம்
நடு எழுத்து மற்றும் குரு மற்றவை லகு - உதாரணம் “ கதா
ஸ”
ஃப கணம்
முதல் எழுத்து குரு மற்றவை லகு - உதாரணம் “கிம் வத”
ந கணம்
எல்லாம் லகு எழுத்துக்கள் - உதாரணம் “ந ஹஸ”
க என்ற எழுத்து குருவை குறிக்கும்,ல என்ற எழுத்து லகுவை குறிக்கும்.
சில சந்தஸ்களின் உதாரணங்கள்
அனுஷ்டுப்
श्लोके
षष्टं गुरु ज्ञेयं सर्वत्र लघु पञ्चमं।
द्विचतुर्पादयोर्ह्रस्वं
सप्तमम् दीर्घमन्ययोः
ஷ்லோகே
ஷஷ்டம்' குரு ஞேயம்' ஸர்வத்ர லகு பஞ்சமம்'।
த்விசதுர்பாதயோர்ஹ்ரஸ்வம்' ஸப்தமம் தீர்கமந்யயோஃ
பொருள்
ஸ்லோகத்தில் (அனுஷ்டிப்பில்) ஆறாவது இடம் எப்போதும்
குரு, ஐந்தாவது எப்போதும் லகு. இரண்டாம் மற்றும் நான்காம் பாதங்களில் ஏழாம் எழுத்து
லகு மற்றதில் (முதல் மற்றும் மூன்றாவதிலும்) அது குரு.
वागर्थाविव
संपृक्तौ वागर्थप्रतिपत्तये।
जगतः
पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ
வாகர்தாவிவ
ஸம்'பிருக்தௌ வாகர்தப்ரதிபத்தயே।
ஜகதஃ பிதரௌ வந்தே பார்வதீபரமேஷ்வரௌ
பொருள்
சொல்லும் பொருளுமென இணைந்த இந்த உலகத்தின் தாய் தந்தையை
சொல்லின் பொருள் விளங்க வணங்குகிறேன்
மந்தாக்ராந்தா
मन्दाक्रान्ता जलधिषडगैर्म्भौ नतौ तो गुरू चेत्
மந்தாக்ராந்தா ஜலதிஷடகைர்ம்பௌ நதௌ தோ குரூ சேத்
பொருள்
இது ம ப ந த த என்ற கணங்களை கொண்டது. நாலு எழுத்துக்கு
பின்பும் 6 எழுத்துக்கு பிறகும் 7 எழுத்துக்கள் பிறகும் ஒரு இடைவெளி உண்டு
कश्चित् कान्ताविरहगुरुणा स्वाधिकारात् प्रमत्तः
शापेनास्तंगमितमहिमा वर्षभोग्येण भर्तुः ।
यक्षश्चक्रे जनकतनयास्नानपुण्योदकेषु
स्निग्धच्छायातरुषु वसतिं रामगिर्याश्रमेषु ॥ १ ॥
கஸ்சித் காந்தா| விரஹகுருணா| ஸ்வாதிகாராத் ப்ரமத்தஃ|
ஷாபேநாஸ்தம்'|கமிதமஹிமா| வர்ஷபோக்யேண பர்துஃ |।
யக்ஷஸ்சக்ரே |ஜநகதநயா|ஸ்நாநபுண்யோதகேஷு|
ஸ்நிக்தச்சாயா|தருஷு வஸதிம்|' ராமகிர்யாஷ்ரமேஷு
பொருள்
தன் பிரியத்துக்குறியவளிடமிருந்து பிரிந்து,
துயரம் மிகுந்தவனாகி, தன் கடமையில் கவனம் நீங்கியவனாய் தன் தலைவனால் ஒரு வருடம் தன்
சக்தியை இழக்க சபிக்கபட்ட யக்ஷன், சீதை குளித்ததால் புண்ணியம் பெற்ற நீர் நிலை உடையனவும்
அடர்நத நிழல் தரும் மரங்கள் நிறைந்த ராமனின் மலை ஆசிரமத்தில் வசித்தார்.
Comments
Post a Comment