நாக நந்தினி அமர்வு - Nexus by yuval nova harari

 

நெக்சஸ்

நாம் தினமும் பூனை படங்களையம், விடீயோக்களையும் டிக் டாக்கிலும், முகநூலிலும் இலவசமாக பதிவேற்றம் செய்கிறோம். ஈரானில், கார் ஓட்டும் பெண்களின் ஹிஜாப் நகர்ந்து விட்டதா என்று பாதையோர காமெராக்கள் மூலம், செயற்கை நுண்ணறிவு தொடர்ந்து கண்காணிக்கிறது. இரண்டு நிமிடத்திற்கு மேல் முகம் வெளியே தெரிந்தால் உடனே அபராதம் விதிக்கும் . இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?

நம்மிடம் பெறும் பூனை படங்களை கொண்டு பெரு நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை முகங்களை அடையாளம் காண பயிற்றுவிக்கின்றன. அவை பூனையை அடையாளம் கண்டவுடன், அதே வழிமுறையை மனித முகங்களை அடையாளம் காணவும் தானாகவே உபயோகிக்க தொடங்குகின்றன.

ஒரு கணினி என்பது குறிப்பிடத்தக்க இரண்டு விஷயங்களைச் செய்வதற்கான ஆற்றல் கொண்ட ஓர் இயந்திரமாகும்; முதலாவது, ஒரு கணினியால் தானாகவே தீர்மானங்கள் மேற்கொள்ள முடியும்; இரண்டாவது, புதிய யோசனைகளை அதனால் தானாகவே உருவாக்க முடியும். ஆலன் டியூரிங், 1948 ஆம் ஆண்டிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றி கணித்தார்.

மூளையும், சுய பிரஞையும் இல்லாத ஒரு எண்தோகை (entropy) மிக துல்லியமாக முகங்களை அடையாளம் காண 20 வருடங்களில் கற்று கொண்டது எவ்வாறு? மனிதன் இதை செய்ய பரிமாண வளர்ச்சியில் பல நூறு வருடங்கள் ஆனது. கணிக்கிலடங்கா தரவுகள் மூலம், தொடர்ந்து பயிற்சி கொடுத்து செயற்கை நுண்ணறிவை வளர்த்து எடுத்த பெருமை விரல் விட்டு எண்ணக்கூடிய சில பெரு நிறுவனங்களையே சேரும்.

மக்களுக்கு ஒரு இலவச மின்னஞ்சல் முகவரியையும், அவர்களுடைய படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றம் செய்ய ஒரு செயலியையும் கொடுத்து, அவர்களிடம் இருந்து மிக அதிகமான தரவுகளை, அவர்கள் அறியாமலேயே எடுத்து கொள்கின்றன இப்பெரு நிறுவனங்கள்.

அனைத்து நாடுகளிலும், பல கோடி மக்களிடம் இலவசமாக பெரும் தரவுகளை வைத்து Big Tech அல்லது பெரு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒரு பெரும் சக்தியாக வளர்த்து கொண்டு இருக்கின்றன. இந்த தரவுகளை பயன்படுத்தி இரானுக்கு கொடுத்தது போல ஓவ்வொரு நாட்டுக்கும் தேவையான சேவை செயற்கை நுண்ணறிவு மென்பொருளை தயாரித்து பெரும் லாபத்திற்கு விற்கும்.

அவசரமாக ஒரு மாலில் பொருள் வாங்கி வீட்டிற்கு செல்லும் ஒரு பெண்ணின் ஹிஜாப் கழண்டு விழுந்து விடுகிறது. அவள் அதை மீண்டும் எடுத்து அணிகிறாள். அதற்குள் செயற்கை நுண்ணறிவு அவள் சட்டத்தை மீறி விட்டதாக ஒரு எச்சரிக்கை கொடுத்து இது, இரண்டாவது மீறல் என்பதால் 15 நாட்களுக்கு அவள் கார் ஓட்ட தடை விதிக்கிறது. சொந்த வாகனத்தை ஒட்டிக்கொண்டு வந்த அவள், வீட்டிற்கு எப்படி செல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறாள்.

செயற்கை நுண்ணறிவின் இடத்தில் ஒரு மனிதர் இருந்தால் அவரிடம் மன்றாடலாம். நிலைமையை விளக்கலாம். அவர் புரிந்து கொண்டிருப்பார். ஆனால் எங்கேயோ இருந்து, உயிரே இல்லாத ஒரு நிரல் மூலம் கட்டுப்படுத்தப்படும் வலை அமைப்பில் யாரிடம் முறையிடுவது? எப்படி முறையிடுவது? என்ன விளக்கம் சொல்வது?

மனித வலையமைப்புகள்

நெக்ஸஸ் என்றால் "சிக்கலான வலை பின்னல்களின் தொகுதி." மனிதன் ஆதி காலத்தில் இருந்து தொடர்ந்து வலை பின்னல்களை உருவாக்கி வருகிறான். மனிதன் உருவாக்கிய இந்த வலைப்பின்னல்கள் அவனை மற்ற விலங்குகளை விட அதிக ஒத்திசைவுடன் இருக்க வழி செய்தன.

மனிதகுலம் மிகப் பெரிய ஒத்துழைப்பு வலையமைப்புகளை உருவாக்குவதன் மூலம் அளப்பரிய சக்தியைக் கைவசப்படுத்துகிறது, ஆனால் இந்த வலையமைப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ள விதம், அவர்கள் தங்கள் சக்தியை அறிவீனமான முறையில் பயன்படுத்துவதற்கு அவர்களை இட்டுச் செல்கிறது.

உதாரணம்: ராணுவ வலைப்பின்னல் - பெரும் உலக போர்கள், நம்பிக்கை வலை பின்னல்கள் - மதம்சார் அடக்குமுறை, தொழில்மய வலைப்பின்னல் - சூழலியல் சீர்குலைவு.

தகவல் என்றல் என்ன?

தகவல்தான் வலையமைப்புகளை ஒன்றிணைக்கின்ற பசையாகும். உண்மையைக் கண்டறிவதற்கு மக்கள் ஒரு பொருளைப் பயன்படுத்தினால், அது தகவலாகும். வெவ்வேறு புள்ளிகளை ஒரு வலையமைப்புக்குள் இணைக்கின்ற எதுவொன்றும் தகவலாகும். தகவல் நமக்கு விஷயங்களைப் பற்றித் தெரிவிப்பதில்லை. மாறாக, அது அவற்றை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருகிறது.

வலைப்பின்னலில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல், ஒரு மொத்த குழுவுக்கான அறிவாக மாறுகிறது. மிகப்பெரிய கோயில், அணை கட்டுமானம் போன்ற தனிமனிதர்களால் செய்ய முடியாத செயல்களை, மனிதன் கூட்டாக இந்த அறிவை பயன்படுத்தி செய்கிறான்.

கதைகள்: மட்டற்றத் தொடர்புகள்

சேப்பியன்ஸாகிய நாம் இவ்வுலகத்தை ஆள்வது நாம் பகுத்தறிவுமிக்கவர்கள் என்பதால் அல்ல, மாறாக, பெரும் எண்ணிக்கைகளில் நெகிழ்வுத்தன்மையுடன் ஒத்துழைக்கக்கூடிய ஒரே விலங்குகள் நாம் மட்டுமே என்பதால்தான்.

இதற்கு முதல் காரணம் கதைகள். கதைகள் மனித மனங்களை இணைகின்றன. ஒரே கனவை காண வைக்கின்றன. கதை கேட்கும் அனைத்து மனிதர்களுக்குள்ளும் ஒரே உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கதைகள் எளிதாக பல குழுக்களுக்கு பரவி, ஒரு கூட்டு மனதை உருவாக்குகின்றன. கதைகள்தான் மனிதன் உருவாக்கிய முதல் வாய்மொழி வலைப்பின்னல்.

 

ஆவணங்கள், புத்தகங்கள்

கதைகளை தொடர்ந்து மனித நாகரிகத்தில், ஆவணங்கள் ஒரு பெரிய புரட்சியை உருவாகின. நிலத்தின் அளவு, வரி வருமானம் மற்றும் கடன் விவரங்களை ஆரம்பத்தில் ஒரு களிமண் பலகையில் குறித்து வைத்தனர். பின்னர், ஓலை, தோல், துணி சுருள்களை பயன்படுத்தினர்.

ஆவணங்கள் மனித வரலாற்றில் இரண்டு முக்கிய பாய்ச்சல்களை ஏற்படுத்தின. மனிதன் அனைத்தையும் குறித்து வைக்க தொடங்கினான். மக்கள் தொகையில் இருந்து, ஆடு மாடுகள், தங்கம், பிற சொத்துகள் அனைத்தும் கணக்கு எடுக்கப்பட்டன. தலைவர்கள், அந்த சொத்திற்கு வரி விதிக்க ஆரம்பித்தனர். மனிதர்கள் அனைத்தையும் பகிர்ந்து உண்ணும் ஆதிவாசி வாழ்க்கையில் இருந்து, அதிகாரம் ஓரிடத்தில் குவியும் அமைப்புக்குள் (அரசாட்சியின் தொடக்கம்) வர ஆரம்பித்தனர்.

ஆவணங்களின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அதை தொகுத்து வைக்கவும், பகுத்து பார்க்கவும், தேவையான ஆவணங்களை சரியான நேரத்தில் மீட்டு எடுக்கவும் வெவேறு வழிமுறைகள் உண்டாகின. அனைத்தையும், முத்திரை குத்துவது (labeling) அல்லது வகைப்படுத்துவது ஆவணங்களை தொகுப்பதற்கும், மீட்டு எடுப்பதற்கும் வசதியாக இருந்தது. மக்களை பலம் சார்ந்தும், சொத்து மற்றும், அவர்கள் செய்யும் வேலை சார்ந்தும் பிரித்து முத்திரை இட்டார்கள் (சாதி, அடுக்குஅதிகாரத்தின் தொடக்கம்).

ஆவணங்களை தொடர்ந்து மனிதகுலம் நிகழ்த்திய அடுத்த தொழில்நுட்ப பாய்ச்சல், அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தது. ஆனால் இது நடக்க பல நூறாண்டுகள் ஆயின. அச்சு இயந்திரங்கள் புத்தகங்களை உருவாக்கின. ஆவணங்களை கையால் பிரதி எடுப்பது என்பது மாறி, சுலபமாக பல நூறு பிரதிகள் காகிதத்தில் அச்சாகின.

முக்கியமான கணித சூத்திரங்கள், கதைகள், காவியங்கள் புத்தகத்தில் ஆச்சு ஆகின. அடுக்கு அதிகார அமைப்பு முறைகள் ஆட்டம் கண்டன. ஒரு புத்தகத்தை வாங்கி, படித்து அறிவை பெருகிக்கொள்ள எல்லாராலும் முடிந்தது. இந்த புத்தக வலைப்பின்னல் மதங்களை பரப்பவும், தொழில்புரட்சிக்கும் வித்திட்டது.

இதற்கு முன் இருந்த தொழில்நுட்பங்களில் இருந்து கணினி வலைப்பின்னல் கிழ்கண்ட வகையில் வேறுபடுகிறது.

1.   கணினி வலைப்பின்னல்கள் மிக விரிவான, மிக சிக்கலான ஊடு அமைப்புகளை கொண்டிருப்பதால், மனித மனமும், மூளையும் அவற்றை புரிந்து கொள்வது நாளுக்கு நாள் சவாலாக மாறி கொண்டிருக்கின்றது.

2.   ஒரு புத்தகத்தை திருத்தி எழுதலாம். ஒரு களிமண் பலகை அல்லது தோல் ஆவணத்தை நெருப்பிலிட்டு எரிக்கலாம். அவை யாவும் புறவயமான பொருட்கள் (physical objects). கணினி வலைப்பின்னலில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் எண்முறை (digital) வடிவில் இருக்கின்றன. அவற்றை முழுமையாக அழிப்பது முடியாத காரியம்.

3.   ஒரு புத்தகத்தையோ, வானொளி நிகழ்ச்சியையோ, தொலைக்காட்சி பெட்டியையோ நம்மால் மூடி வைக்க, அணைத்து வைக்க முடியும். அதன் தொடர்பு எல்லை அல்லது கண்காணிப்பு எல்லையில் இருந்து முழுவதுமாக நம்மால் துண்டித்து கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பில் இருந்து நம்மால் தப்பவே முடியாது. இணையம், திறன்பேசி, போக்குவரத்துக்கு கேமெராக்கள், மூலம் நமது டிஜிட்டல் காலடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

4.   இதற்கு முன் இருந்த அத்தனை தொழில்நுட்பங்களும், மனிதனால் நடத்தப்படும் அதிகார அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், இன்று நாம் என்ன பார்க்க வேண்டும், கேட்க வேண்டும் என்று "படிமுறை தீர்வுகள்" (algorithms) முடிவு செய்கின்றன.

2016 மியான்மார் ரோஹிங்கியா கலவரத்தின் பொழுது படிமுறை தீர்வுகள் தொடர்ந்து வன்முறையை தூண்டும் காணொளிகளை அடுத்து, அடுத்து ஒளிபரப்பின. நேர்மறை சிந்தனையை, வன்முறையை கட்டுப்படுத்தும் ஒரு காணொளியை கூட அவை ஒளிபரப்பவில்லை. இந்த முடிவை அவை தானாகவே எடுத்ததாக முகநூல் வல்லுநர்கள் கூறினார்கள்.

5.   ஒவ்வொரு நிறுவனத்துக்கும், சேவைக்கும், சமூக நம்பகத்தன்மை மதிப்பீட்டு மதிப்பெண் (rating) அதன் பயனாளர்களால் வழங்கப்படுகிறது. இதை செயற்கை நுண்ணறிவுதான் முழுமையாக கட்டுப்படுத்துகிறது. பயனாளர்களின் ரேட்டிங்கிற்கும், செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் ரேட்டிங்கிற்கும் இருக்கும் இடைவெளி அதிகரித்தால் அதை பற்றி எந்த விளக்கத்தையும் பெற முடியாது. அப்படியே விளக்கம் கொடுத்தாலும், அது பல நூறு தரவுகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். அது சாதாரண மனிதனுக்கு புரியாது.

எரிக் லூமிஸ் என்ற ஒரு அமெரிக்கர் "காம்பஸ்" என்ற சட்ட படிமுறை தீர்வு மூலம் ஒரு காரை அதன் உரிமையாளர் அனுமதி இல்லாமல் எடுத்ததற்காக ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். காம்ப்ஸ் படிமுறை தீர்வு அவர் எதிர்காலத்தில் சமூகத்திற்கு ஒரு இடைஞ்சலாக இருக்கலாம் என்று நினைத்துதான் காரணம். சாதாரணமாக இத்தகைய குற்றங்களுக்கு மூன்றில் இருந்து ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் தான் விதிக்கப்படும்.

சமூக நம்பகத்தன்மை மதிப்பீடு மூலமாக, ஒரு கல்லூரி உதவி தொகை, வேலை வாய்ப்பு, வாங்கி கடன் மற்றும் காப்பீடு அனைத்தும் இறுதி செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் இன்று செயற்கை நுண்ணறிவுதான் கட்டுப்படுத்துகிறது.

நிறைவு

அதிகார அமைப்புமுறைக்கும் தொன்மவியலுக்கும் இடையேயான திருமணத்திலிருந்து நாகரிகங்கள் பிறக்கின்றன. கணினி அடிப்படையிலான வலையமைப்பு ஒரு புதிய வகை அதிகார அமைப்புமுறையாகும். நாம் இதற்கு முன்பு பார்த்துள்ள மனித அடிப்படையிலான எந்தவோர் அதிகார அமைப்புமுறையைவிடவும் இது மிக அதிக சக்திவாய்ந்தது, ஒருபோதும் சோர்வடையாதது.

இந்த வலையமைப்பு, கணினியிடை கட்டுக்கதைகளையும் உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்தக் கட்டுக்கதைகள், மனிதனால் படைக்கப்பட்ட எந்தவொரு கடவுளையும்விட அதிகச் சிக்கலானவையாகவும் அந்நியமானவையாகவும் இருக்கும். இந்த வலையமைப்பினால் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள நன்மைகள் அளப்பரியவை. இதனால் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள பாதகமான விஷயம், மனித நாகரிகத்தின் அழிவாகும்.

 

 

 

Comments

  1. It's very curious to know about the contemporary age of network.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அறிமுகம்

சிவகுமரன் அமர்வு - சரவணன் சந்திரன் சிறுகதைகள்